மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐதராபாத் மாநகர செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ரூ.7 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராமலிங்க ராஜு உள்பட 10 பேர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, செர்லாபல்லி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தண்டனை பெற்ற சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு, அவரின் சகோதரர்கள் ராமா ராஜூ, சூர்ய நாராயண ராஜு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன முன்னாள் தலைமை நிதி அதிகாரி வத்லாமணி ஸ்ரீநிவாஸ், பி.டபிள்யூ.சி. ஆடிட்டர்கள் சுப்ரமணி கோபாலகிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், ஊழியர்கள் ஜி.ராமகிருஷ்ணா, வெங்கட்பதி ராஜு, ஸ்ரீசைலம், இண்டர்னல் ஆடிட்டர் பிரபாகர் குப்தா ஆகிய 10 பேர்களும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை நீக்குமாறும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரியும், ஐதராபாத் மாநகர செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, ராமலிங்க ராஜூ உள்பட 10 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ராமலிங்க ராஜூ மற்றும் அவரது சகோதரருக்கு ரூ.1 லட்சத்திற்கான தனிப்பட்ட பத்திரம் சமர்பிப்பதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மீதமுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரத்திற்கான பத்திரம் சமர்பிப்பதன் நிபந்தனையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.