பழம்பெரும் இயக்குனர் பாலுமகேந்திரா திடீர் மரணம்.

பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு இன்று அதிகாலை திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சைக்கு பலனின்று அவர் இன்று காலை மரணம் அடைந்தார்.

மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், தலைமுறைகள் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அவரை வடபழநியில் உள்ள விஜயா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்து நடந்து வந்தது.

பாலுமகேந்திராவின் உடல்நிலை குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என்றும், சிகிச்சை முடிந்தபின்னரே அவரது நிலை குறித்து தெரியவரும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் குழு தெரிவித்தது. பாலு மகேந்திரா மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படம் என ஐந்து முறை தேசிய விருது வென்றவர் பாலு மகேந்திரா. தேசிய விருது மட்டுமன்றி கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றிருக்கிறார். இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply