ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் சிக்கலா? களத்தில் இறங்குகிறது பீட்டா
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நேற்று மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிறது விலங்குகள் நல அமைப்பான பீட்டா (People for the Ethical Treatment of Animals -PETA என்ற அமைப்பு
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை எதிர்த்து, சுப்ரிம் கோர்ட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ள இந்த அமைப்பு இவ்வருடம் ஜல்லிக்கட்டை நடத்த தடை விதிக்குமாறு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து பீட்டா அமைப்பைச் சேர்ந்த டாக்டர். சைதன்யா கொடுரி என்பவர் கூறும்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து இருப்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கான ஒப்புதல் எதனையும் மத்திய அரசுக்கு தாங்கள் கொடுக்கவில்லை என்றும், இது குறித்த மத்திய அரசின் அரசாணை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாகும் என்றும் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் (Animal Welfare Board of India) துணை தலைவர் டாக்டர் சின்னி கிருஷ்ணா கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை தேசத்திற்கு ஒரு கரும்புள்ளி என்றும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிரான தங்களது பிரசாரமும், போராட்டமும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
பீட்டா மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தீவிரமாக களமிறங்கியுள்ளதால் ஜல்லிக்கட்டு பிரியவர்களுக்கு இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.