பெங்களூர் நகரில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு சர்ச் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றின் முன் இருந்த பூந்தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று நேற்று இரவு 8.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது, அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பேர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த 32 வயது பவானிதேவி மற்றும் 22 வயது கார்த்திக், 33 வயது சந்தீப் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பவானி சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பெங்களுர் நகர காவல்துரை ஆணையர் ரெட்டி கூறியது:
பயங்கரவாத அமைப்பின் சுட்டுரை கணக்கை இயக்கிய மெஹ்தியின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
இதனிடையே, குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த ஹோட்டல் முன் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், இரவு 7.30 மணியளவில் அங்குள்ள நடைபாதையில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரில் இருவர் மர்மப் பொருளைக் கொண்டு வந்து அங்குள்ள பூந்தொட்டியில் வைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிறையிலிருந்து தப்பிய சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
முதல்வரிடம் ராஜ்நாத் சிங் பேச்சு: இந்நிலையில், குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசியில் பேசினார்.
கர்நாடகத்துக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு வழங்கத் தயாராக உள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.