முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுக்கு அரசு தரப்பு ஆட்சேபணை செய்யவில்லை என்றும், அதனால் இந்த வழக்கில் தாம் புகார்தாரர் என்பதால் வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை வைத்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதி குமாரசாமி நிராகரித்துவிட்டார். ஜாமீன் மனுவை காரணம் காட்டி வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியை சேர்க்க முடியாது என்றும், வேண்டுமானால் அரசு தரப்புக்கு சுப்பிரமணியன் சுவாமி உதவியாக இருந்து செயல்படலாம் என்றும் அறிவுரை கூறினார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் குமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வழக்கை ஒத்திவைக்க கால அவகாசம் வழங்க முடியாது என்று கூறிய அவர் விசாரணையை உடனே தொடருங்கள் என்று கண்டிப்புடன் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தொடர்ந்து வாதிட்டார்.
இதனிடையே, இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனின் கோரிக்கையையும் நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்துடன் அன்பழகனின் வேலை முடிந்து விட்டது என்றும் மேல்முறையீட்டு விசாரணையில் அவர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.