பெங்களூர் நாட்கள். திரைவிமர்சனம்

பெங்களூர் நாட்கள். திரைவிமர்சனம்

bangalore-naatkalமற்றவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ளாத ஆர்யா, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றும் பாபி சிம்ஹா, எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற கனவோடு வாழும் ஸ்ரீதிவ்யா… இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் உறவுக்காரர்கள். பெங்களூர் சென்று ஜாலியாக வாழவேண்டும் என்பது இவர்களின் நீண்டநாள் ஆசை. 

இந்நிலையில், ராணாவை கல்யாணம் செய்துகொள்வதால் ஸ்ரீதிவ்யா பெங்களூருக்கு பயணமாகிறார். பாபி சிம்ஹாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. ஆர்யாவும் ஒருகட்டத்தில் பெங்களூர் வர நேரிடுகிறது. பெங்களூர் வாழ்க்கை இனிமையாக அமையும் என நினைக்கும் இவர்களது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை வருகிறது.

இதிலிருந்து இவர்கள் மீண்டு வந்தார்களா? இவர்களது பெங்களூர் நாட்கள் எப்படி அமைந்தது? என்பதே மீதிக்கதை. 

மலையாளத்தில் வெளிவந்த ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீமேக்தான் ‘பெங்களூர் நாட்கள்’.  ஆர்யா ஜாலியான பையனாக படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா துறுதுறுவென இருந்தாலும், நஸ்ரியாவின் நடிப்புக்கு இவரால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பாபி சிம்ஹாவுக்கு அவருடைய கதாபாத்திரம் சற்றும் பொருந்தவில்லை. ஆனாலும், நடிப்பில் ஓகே ரகம்தான்.

ஆர்யாவின் காதலியாக வரும் பார்வதி கொள்ளை அழகில் கவர்கிறார். இவருடைய கதாபாத்திரத்திற்கு வேறொருவரை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அமைதியாகவே வரும் ராணா, நடிப்பில் பேசவைக்கிறார். சமந்தா சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். அவருடைய அப்பாவாக வரும் பிரகாஷ் ராஜூம் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் இடைவேளைக்கு பிறகு காமெடியில் கலகலக்க வைக்கிறார்.  

படத்திற்கு மிகப்பெரிய பலமே இந்த நட்சத்திர பட்டாளங்கள்தான். ஆனால், மலையாளத்தில் இப்படத்தின் ஒரிஜினலை பார்த்து ரசித்தவர்களுக்கு இப்படம் கொஞ்சம் ஏமாற்றம்தான். இரண்டாம் பாதி இழுஇழுவென இருப்பது படத்திற்கு பெரிய பலவீனம். அதேபோல், ஒருசில கதாபாத்திரங்கள் ஒரிஜினல் கதாபாத்திரங்களை மிஞ்சும் அளவுக்கு இல்லாததும் வருத்தம். பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யாவை தவிர்த்து மற்ற அனைவரும் ஓரளவுக்கு பொருந்தியிருக்கிறார்கள்.

உறவுகளுக்குள்ள நட்பை இயக்குனர் பொம்முரிலு பாஸ்கர் இதில் அழகாக சொல்லியிருக்கிறார். ஆனால், இப்படம் ஒரிஜினலின் தாக்கத்தை ஏற்படுத்தாதது பலவீனம். ஒரிஜினலை பார்க்காதவர்களுக்கு இப்படம் ஓரளவுக்கு பிடிக்கும். கோபி சந்தரின் பாடல்கள் படத்தின் திரைக்கதையை ரசிக்க விடாமல் செய்கிறது. பின்னணி இசையிலும் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். குகன் ஒளிப்பதிவு கலர்புல்லாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.

மொத்தத்தில் ‘பெங்களூர் நாட்கள்’ போரடிக்கும் நாட்கள்.

Leave a Reply