பெங்களூரில் இதுவரை இயங்கி வந்த நித்யானன்ந்தா தியான பீடத்தை தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக நித்யானந்தா நேற்று இணையதளம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் நகரில் அமைந்துள்ள நித்யானந்தா தியான பீடத்தில் அவரிடம் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூர் பிடதி காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை சோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் அவருக்கு நேற்று முன்தினம் 7 டாக்டர்கள் இணைந்து 5½ மணி நேரம் ஆண்மை பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில் தினசரி “நித்யானந்தா இணையதள தொலைக்காட்சி”யில் சொற்பொழிவாற்றும் நித்யானந்தா, நேற்று தனது ஆன்மிக சொற்பொழிவை தொடங்கும் முன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளிட்டார். அதன்படி இதுவரை பெங்களூர் ‘பிடுதியில் இயங்கி வந்த தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக அனைத்தும் பிடதியில் இருந்து மாற்றப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் தினமும் நடைபெறும் பூஜைகள் உள்பட அனைத்தும் திருவண்ணாமலையிலேயே நடைபெறும் என்றும் இருப்பினும் பிடதி தியான பீடம் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.