பாலியல் தொல்லை பிரச்சனைக்கு பெண்களின் உடைதான் காரணம். சமாஜ்வாடி தலைவர் கருத்து
நேற்று முன் தினம் புத்தாண்டு கொண்டாட்டம் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பெங்களூரில் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்கள் மீது பாலியல் தொல்லை தாக்குதல் நடந்ததாக சில வாலிபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பாலியல் தொல்லை பிரச்சனைக்கு பெண்கள் அணியும் மேற்கத்திய உடைகள்தான் காரணம் என்று உள்துறை மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். இதே கருத்தை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அபு அஸ்மி அவர்களும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அபு அஸ்மி கூறியதாவது: பெங்களூருவில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று நள்ளிரவில் தனியாக உடல் தெரியும் அளவில் ஆடைகளை அணிந்துக் கொண்டு சென்று உள்ளனர். கலாச்சாரம் என்ற பெயரில் இதுபோன்ற ஆடைகளை அணிவதால் பிரச்சனை ஏற்படுகிறது.
எனவே மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். என்னுடைய குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் இரவு 12 மணிக்கு மேல் ஆண் துணையின்றி வெளியே செல்லவேண்டும் என்றால் நான் அனுமதிக்க மாட்டேன். எல்லா இடத்திற்கும் போலீஸ் செல்ல முடியாது, எல்லோருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது… நாமே நம்முடைய பாதுகாப்பை உறுதிசெய்துக் கொள்ளவேண்டும் என்று அபு அஸ்மி கூறியுள்ளார்.
அபு அஸ்மியின் இந்த கருத்துக்கு பெண்கள் அமைப்பு எதிர்பார்த்தபடியே கண்டனங்கள் தெரிவித்து வருகிறது.