இந்தியாவின் 25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றியது வங்கதேசம்.
அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய அரசுக்கு எதிராக போராடி வரும் இயக்கங்களில் முக்கியமானது உல்பா தீவிரவாத இயக்கம். இந்த இயக்கத்தை அனுப் சேத்தியா என்பவர் தோற்றுவித்தார். அரசுக்கு எதிராக போராடி வரும் இவர் மீது இந்தியாவின் பல மாநிலங்களில் கொலை, வங்கிக் கொள்ளை, மிரட்டிப் பணம் பறித்தல் என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் உல்பா இயக்கத்திற்கு எதிரான நெருக்கடி அதிகமானதை தொடர்ந்து கடந்த 1990ஆம் ஆண்டு அனுப் சேத்தியா வங்கதேசம் சென்றபோது அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த 25 வருடங்களாக கோரி வந்த நிலையில் தற்போது உல்ஃபா தீவிரவாத இயக்கத் தலைவர் அனுப் சேத்தியாவை, இந்தியாவிடம் அந்நாட்டு அரசு ஒப்படைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சக்திகள், வங்கதேசத்தில் செயல்பட அனுமதிப்பதில்லை என்ற அடிப்படையில், உல்பா தலைவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். இந்தியாவின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வங்கதேச பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்