மொபைல் சர்வீஸை மாற்றுவது போல் வங்கியையும் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி அதிரடி
ஒரு மொபைல் நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை என்றால் மொபைல் நம்பரை மாற்றாமல், வேறு மொபைல் நிறுவனத்தின் சேவைக்கு மாற்றுவது போல, ஒரு வங்கியின் சேவை பிடிக்கவில்லை என்றால் வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமல் வேறு வங்கி சேவைக்கு மாறும் புதிய வசதி விரைவில் அமல்படுத்தவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் பயன் அடைவர்.
இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முத்ரா அவர்கள் கூறியபோது, ‘வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு எண்ணை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ள திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வங்கி சேவை இதை சாத்தியமாக்கும். மேலும் இந்த சேவை மாற்றத்தால் ஒரு வாடிக்கையாளரின் முந்தைய வரவுசெலவுகள் அனைத்தையும் புதிய வங்கியில் பெற்றுக்கொள்ளலாம்
தற்போது ஆதார் அடிப்படையில் அனைத்து பரிவர்த்தனையையும் மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையிலும் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஆதார் அடிப்படையில் வங்கி கணக்கு எண் மாற்றும் வசதி கொண்டுவரப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து யுஐடிஏஐ துணை இயக்குநர் ஜெனரல் சம்னேஷ் ஜோஷி கூறுகையில், வங்கிக்கணக்கு மாற்றும் வசதியைப் பொறுத்த வரை, ஆதார் நிரந்தர நிதி முகவரியாகக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.