கல்விக்கடன், கிரெடிட் கடன் வைத்துள்ளீர்களா? நீங்கள் வங்கித்தேர்வை எழுத முடியாது. அதிரடி அறிவிப்பு
ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர்களை ஒன்றும் செய்ய முடியாத வங்கி நிர்வாகம் சாதாரண ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்கள் வாங்கிய கடனுக்காக கடுமையான விதிமுறைகளை வங்கி நிர்வாகம் கடைபிடித்து வருகிறது. அவற்றில் ஒன்றாக வங்கிகளில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாதவர்கள் வங்கிகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற முடியாது என்று புதிய விதிமுறை ஒன்றை எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய விதிமுறை காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எஸ்.பி.ஐ வங்கியில் தமிழக கிளைகளில் காலியாக உள்ள ஆயிரத்து 420 பணியிடங்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு அடுத்த மாதம் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்பவர்களுக்கு எஸ்.பி.ஐ. விதித்துள்ள புதிய கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கல்விக் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள், கிரெடிட் கார்டு தவணையை முறையாக செலுத்தாதவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க முடியாது என்ற அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளது. இந்த அறிவிப்புக்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் பலர் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மிக குறைந்த தொகைக்காக, இளைஞர்களின் வேலைவாய்ப்பில் கை வைத்து அவர்களுடைய எதிர்காலத்தையே முடக்குவது எந்த வகையில் நியாயாம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தேர்வர்கள் மட்டுமல்லாமல், வங்கி ஊழியர் சம்மேளனமும் எஸ்.பி.ஐ-யின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெரு முதலாளிகள் வைத்துள்ள பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வசூலிக்காத வங்கிகள், ஆயிரக்கணக்கான ரூபாய்க்காக வேலையில்லாத இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது எந்த வகையில் நியாயம் என்று வங்கி ஊழியர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த அறிவிப்பை எஸ்பிஐ திரும்ப பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் வங்கியில் கடன் வாங்கியவர்கள் இதுபோன்ற அதிரடி அறிவிப்பு அறிவித்தால் மட்டுமே திரும்ப கட்டுவார்கள் என்று எஸ்பிஐ நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.