வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு, வங்கி தனியார்மயம், பெரும் முதலாளிகளின் கடனை ரத்து செய்தல், பெரும் முதலாளிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிடுதல் போன்ற வங்கி சீர்திருத்த கொள்கைகளை கைவிடக்கோரி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 14 ஆயிரம் வங்கி கிளையை சேர்ந்த 60 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பழைய தனியார் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சஸ், ஐ.டி.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, போன்ற புதியதாக வந்த தனியார் வங்கிகள் மட்டும் செயல்பட்டன. பெரும்பாலான வங்கி கிளைகள் மூடப்பட்டதால் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் வங்கி திறந்திருந்த போதிலும் ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.

ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் வங்கி சேவை முழுமையாக பாதிக்கப்பட்டன. பணப்பரிமாற்றம், காசோலை பரிமாற்றம் போன்ற சேவைகள் முற்றிலும் முடங்கின. அந்நிய செலவாணி மாற்றம், ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றுக்கான வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான 5 லட்சம் காசோலை பரிமாற்ற சேவை பாதித்தது. சென்னையில் மட்டும் 1400 வங்கிகள் உள்ளன. சென்னையில் மட்டும் ரூ.2000 கோடி மதிப்பிலான 3 லட்சம் காசோலை பரிமாற்றம் முடங்கியது.

ஒட்டு மொத்தமாக அனைத்து சேவைகளும் முடங்கியதால் வர்த்தக பிரமுகர்கள், வணிக நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களின் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் நேற்றே அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் முழுமையாக நிரப்பி வைக்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் மையங்களுக்கு சென்று அவசர தேவைக்கு பணத்தை எடுத்து சென்றனர்.

ஸ்டேட் பாங்கில் மட்டும் தான் அதிக பட்சமாக ரூ.40 ஆயிரம் வரை ஒரு நாளில் எடுக்க முடியும் மற்ற வங்கிகளில் ரூ.20 அயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மட்டும் எடுக்க முடியும். இதனால் ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு சில மையங்களில் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்தனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் தலைவர் வெங்கடாசலம் மற்றும் அமைப்பாளர் பாஸ்கர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

வெங்கடசாலம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கிகளை சீர்திருத்தம் செய்வதாக கூறி பெரும் முதலாளிகளுக்கு சலுகைகள் காட்டுவது முறையல்ல. அதனால் வங்கி சீர்திருத்தங்களை கைவிட வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனே தீர்க்காவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று அவர் கூறினார்.

Leave a Reply