பொதுமக்களின் நலனுக்காகத்தான் வேலை நிறுத்தம் செய்தோம். வங்கி ஊழியர்கள் பேட்டி
வங்கி ஊழியர்கள் சங்கம் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் நலனுக்காகத்தான் தாங்கள் வேலை நிறுத்தம் செய்ததாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ” எங்களுக்கு நல உதவிகள் வேண்டியோ, ஊதிய உயர்வுக்காகவோ நாங்கள் போராடவில்லை. பொதுமக்களின் நன்மைக்காகத்தான் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தோம். தனியார் நிதி வங்கிகளை உருவாக்குவது, ஸ்டேட் வங்கிகளை ஒருங்கிணைப்பது என பொதுத்துறை வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் வேலைகளில் மத்திய அரசு இறங்கிவிட்டது. தனியார் வங்கிகளைவிட 90 சதவீத வாடிக்கையாளர்களை நாங்கள் தக்க வைத்திருக்கிறோம். 76 சதவீத வணிகர்கள் பொதுத்துறை வங்கிகளை நோக்கித்தான் வருகிறார்கள்.
இதற்கு முடிவு கட்டும்விதமாக தனியார்மயப்படுத்தும் வேலைகளில் மத்திய அரசு இறங்கிவிட்டது. கடந்த 26-ம் தேதி நடந்த வங்கி உயர் அதிகாரிகள் கூட்டத்தில், ‘ வங்கிகளை இணைப்பது அரசின் கொள்கை முடிவு’ என ஒரே வரியில் முடித்துவிட்டனர். ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்த முயல்கின்றனர். பென்சன், மகப்பேறு ஓய்வு என எந்த வசதியும் கிடைக்கவிடாமல் செய்வதற்கான பணிகள் வேகமெடுத்து வருகின்றன” என்று கூறியுள்ளார்.
” நாட்டின் வாராக்கடன்களின் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இதற்கு முழுக் காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்கு இணையாக, வங்கிகள் கடன் அளிக்கின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் இருந்து கடனாக வாங்கிவிட்டு, நமது ஏழை எளிய மாணவர்கள் வாங்கிய சில லட்ச ரூபாய் கடன்களை வசூலிக்க வன்முறையைப் பயன்படுத்துகிறது ரிலையன்ஸ் என்று அவர் மேலும் கூறினார்.