எஸ்பிஐ வங்கிக்கு வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை மேற்கொண்டனர். புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை குறித்த ஒப்பந்தத்தை மீறி செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்பட 5 வங்கிகளைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், வங்கிப் பணியில் இருந்தபோது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க எஸ்பிஐ நிர்வாகம் மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் ரூ.150 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் 216 வங்கிகளை சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுக்க வங்கி சேவை முற்றிலும் முடங்கியது. இதனிடையே எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் எச்சரித்துள்ளனர்.