ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்களின் பயன்பாடு இன்றைய சூழ்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெறும் 4 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்கும் ஸ்மார்ட்போன்கள், விலைக்கு தகுந்தாற்போல் பல அதி நவீன வசதிகளை பெற்றுள்ளன. ஆனால், ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் உள்ள ஒரு வசதி இன்டர்நெட் சேவைதான். சாதாரண ஆன்ட்ராய்ட் போனில் தொடங்கி ஆப்பிள்போன் வரை இன்டர்நெட் சேவை எளிதாகிவிட்டது.
குறிப்பாக, ஸ்மார்ட்போன் வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்களில் பலர், வங்கிகளுக்கு செல்ல சோம்பேறித்தனம் காட்டுகின்றனர். இதனால், தங்களது போனில் இருந்தே ஆன்லைன் வங்கி சேவை மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர்.
ஆனால், இப்படி ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைன் வங்கி சேவையை மேற்கொள்வது எப்படிப்பட்ட ஆபத்தானது தெரியுமா? உங்களது வங்கி கணக்குகளை ஹேக்கர் திருட தொடங்கி விடுகின்றனர். இதுகுறித்து சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் எக்ஸ்பீரியன் என்ற நிறுவனம் தனது ஆய்வில், “உலக அளவில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நபர்களில் ஆறில் ஒருவரின் வங்கி கணக்குகளை ஸ்மார்ட்போன்களில் இருந்து ஹேக்கர்கள் திருடுகின்றனர். சாதாரண கம்ப்யூட்டரில் நீங்கள் ஹேக்கர்கள் மற்றும் வைரஸ்களை தடுக்க ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர்கள் பயன்படுத்துவீர்கள். ஆனால், இப்போது உலகில் உள்ள எந்த ஒரு ஸ்மார்ட்போனிலும் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர்கள் இல்லை.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஹேக்கர்கள், எளிதாக இன்டர்நெட் மூலம் ஸ்மார்ட்போன்களில் புகுந்து, உங்களது வங்கியின் ரகசிய கணக்குகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்கின்றனர். இது ஆபத்தான ஒன்றாகும். எனவே, ஸ்மார்ட் போன்கள் மூலம் ஆன்லைன் வங்கி சேவையை மேற்கொள்ளும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்” என்கிறது.