திவாலான தொழிலதிபர்கள் தேர்தலில் நிற்ககூடாது., புதிய மசோதா விரைவில் தாக்கல்
இந்திய வங்கிகளிடம் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு அதை திரும்ப கட்டாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் எம்.பி.பதவியை பறிக்க வேண்டும் என ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் திவாலான நிறுவனங்களின் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், அரசுப் பதவிகளை வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று பாராளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், அந்நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து கடனை ஈடு கட்டுவதற்கும் வகை செய்யும் மசோதா ஒன்றை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
‘நிறுவனங்கள் திவால் மசோதா’ என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, 30 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அந்த கூட்டுக் குழு, அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளதை அடுத்து தற்போது இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நிறுவனங்கள் திவாலாகும் பட்சத்தில், அதன் அமைப்பாளர்கள், நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழப்பதற்கு மசோதாவில் வகை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பிற நிறுவனங்களில் இயக்குநராக நீடிப்பதற்கும் அவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அரசு பதவிகள் மற்றும் பொறுப்புகளில் சம்பந்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதித்து திருத்தங்களுடன் கூடிய மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.