வெளிநாட்டு சொத்து விவரங்களை கேட்க வங்கிகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை: விஜய் மல்லையா
தன்னுடைய வெளிநாட்டு சொத்துக்கணக்குகள் குறித்து கேள்வி கேட்க வங்கிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றின் மூலம் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
ஸ்டேட் வங்கி உள்பட இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும், தொழிலதிபர் விஜய்மல்லையா மீது வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டால் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் விஜய் மல்லையாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமான, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள சொத்து கணக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ஆனால் விஜய் மல்லையா சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘வங்கிகள் தனக்கு கடன் வழங்கும் போது வெளிநாட்டில் தனக்கு உள்ள சொத்துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே தற்போது தன் வெளிநாட்டு சொத்துக் கணக்கை கேட்க வங்கிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையா தன்னுடைய சொத்தின் பெரும்பகுதியை வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாகவும், அவருடைய வெளிநாட்டு சொத்தை கைப்பற்றினால் வங்கிகளின் மொத்த கடனையும் அடைத்துவிடலாம் என்றும் கூறப்படுகிறது.
Chennai Today News: Banks have no rights to know my foreign properties. Vijay Mallaiah