டுவிட்டரை தடை செய்ய டுவிட்டரிலேயே ஹேஷ்டேக்கை உருவாக்கிய இந்தியர்கள்
ஃபேஸ்புக்கை அடுத்து உலகில் அதிக நபர்களால் நேசிக்கப்படும் சமூக வலைத்தளமாக இருப்பது டுவிட்டர்தான். ஆனால் இந்த டுவிட்டர் இணையதளம் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவருவதாக ஏற்கனவே பல புகார்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்தியாவின் ஒரு முக்கிய பகுதியான ஜம்மு பாகிஸ்தானில் உள்ளது போலும், காஷ்மீர் சீனாவின் ஒரு பகுதியை போலவும் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் டுவிட்டரை பயன்படுத்துவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டுவிட்டரின் இந்த தவறுக்கு, அந்த இணையத்தை பயன்படுத்துவோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி #BanTwitter என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரிலேயே உருவாக்கி அதில் ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்க்கும்போது ”தவறு எங்கு நடந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. விரைவில் சரி செய்யப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளனர். ”இந்த பிரச்னை குறித்த அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும்” என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.