இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகிய இருவரும் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக சேவை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு மத்திய அரசு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய பத்ம விருதுகளை வருடந்தோறும் வழங்கி கெளரவித்து வருகிறது.
2014ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, துணை கேப்டன் விராட் கோலி ஆகியோரின் பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை, ஒரு நாள் போட்டி உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று ஐ.சி.சி. கோப்பைகளையும் நாட்டிற்கு வெற்றி பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற வரலாற்று சாதனைக்குரியவர் டோனி. தோனி கடந்த 2009-ம்ஆண்டு ஏற்கனவே பத்மஸ்ரீ விருதை பெற்றிருப்பவர் என்பதால், இந்த தடவை அவரது பெயர் பத்மபூஷண் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராத்கோஹ்லி பத்ம விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர்‘இந்திய கிரிக்கெட்டில் கடந்த 4 ஆண்டுகளில் கோலியை விட சிறப்பாக ஆடியவர் யாரும் கிடையாது. அவரது ஆட்டம் அருமையானது. எனவே அவரது பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு அனுப்பியது சரியானதாக கருதுகிறோம்’ என்று கூறினார்.
இது தவிர இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பெயரும் பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.