இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா காலமானார்
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா நேற்று மாலை காலமானார்.. அவருக்கு வயது 75. ஜக்மோகன் டால்மியாவின் மறைவிற்கு பிரதமர் மோடிம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஜக்மோகன் டால்மியா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வியாழன் அன்று இரவு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
ஜக்மோகன் டால்மியா வகித்த பதவிகள்:
இந்திய கிரிக்கெட்டை வர்த்தக ரீதியில் முன்னேற்றம் அடைய செய்தவர் மறைந்த ஜக்மோகன் டால்மியா. இவரது வியூகத்தால் தான் பணம் கொழிக்கக்கூடிய விளையாட்டாக கிரிக்கெட் மாறியது.
கடந்த 1990களில் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) ரூ. 81.60 லட்சம் பற்றாக்குறையில் ஓடிக்கொண்டிருந்தது. இவர் செயலர் ஆன அடுத்த ஆண்டில், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியது. இந்திய அணி விளையாடும் போட்டிகளின் ‘டிவி’ ஒளிபரப்புக்காக 90ல் ‘வேர்ல்டு டெல்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். இதன் மூலம் கோடிகள் கொட்ட, உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக பி.சி.சி.ஐ., உருவெடுத்தது.
* கடந்த 1979ல் பி.சி.சி.ஐ.,யில் காலடி வைத்தார். 1983-85ல் பொருளாளர், 1993-97ல் செயலராக இருந்தார்.
* 1987, 1996ல் இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
* 1996ல் டால்மியாவை பி.பி.சி., உலகின் சிறந்த ஆறு விளையாட்டு நிர்வாகிகளில் ஒருவராக தேர்வு செய்தது.
* 1997ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தலைவராக ஒருமனதாக தேர்வானார்.
* 2001-2004ல் பி.சி.சி.ஐ., தலைவராக செயல்பட்ட இவர், 2005, தேர்தலில் சரத்பவாரிடம் தோல்வியடைந்தார்.
* 1996, உலக கோப்பை தொடரின் போது இவர், நிதி முறைகேடு செய்ததாக கூறி, 2006ல் பி.சி.சி.ஐ., அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். கோல்கட்டா கோர்ட்டில் இது நிரூபிக்கப்படாததால், 2007ல் மீண்டும் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவரானார்.
* 2013ல் சீனிவாசன் ஒதுங்கியதை அடுத்து, பி.சி.சி.ஐ.,யின் தற்காலிக தலைவரானார்.
* 2015, மார்ச் 2ல் மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராக ஒருமனதாக தேர்வானார்.
கடந்த 1983ஆம் ஆண்டு முதல் அவர் கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளராக இருந்த போது, 1987 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கட் போட்டிகளை இந்தியா நடத்த முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இரண்டாவது முறையாக டால்மியா பொறுப்பேற்றிருந்தார்.