சிவப்பு விளக்கு தடை: விதியை மீற வழிகாட்டும் அரசுகள்

சிவப்பு விளக்கு தடை: விதியை மீற வழிகாட்டும் அரசுகள்

சிவப்பு விளக்குகள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறுவதற்கு சில மாநில அரசுகள் வழிகாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.

விவிஐபிக்கள் தங்கள் வாகனங்களில் சிவப்பு விளக்குகளை பயன்படுத்துவதற்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. மே 1ஆம் தேதி முதல் இந்த தடை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கட்டுமானத் தளவாடப் பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளும் தங்கள் வாகனங்களில் சிவப்பு விளக்கை இனிமேல் பயன்படுத்த முடியாது.

இப்படியிருக்க, மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் தீபக் வசந்த் கெஷர்க்கார் முக்கியப் பிரமுகர்களின் வாகனங்களை அவர்க்களது பாதுகாப்பு கருதி அடையாளம் காண வேண்டியுள்ளது என்றும் அதற்காக மத்திய அரசின் தடை உத்தரவை மீறாத வண்ணம் மாற்று வழியை பின்பற்றப்போவதாகவும் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் உட்பட சில அமைச்சர்கள் சிகப்பு விளக்குகளை நீக்கவிட்டபோதும், சில அமைச்சர்களும் அதிகாரிகளும் சிகப்பு விளக்கு இல்லாமல் எச்சரிக்கை ஒலியை மட்டும் எழுப்பும் ஒலிப்பான்களை தங்கள் கார்களில் பொறுத்தியுள்ளனர். ஆனால், போக்குவரத்துத்துறையினர் மட்டுமே இதுபோன்ற எச்சரிக்கை ஒலிப்பான்களை பயன்படுத்த முடியும். பிற வாகனங்களில் அவற்றை பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அம்மாநில காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் சில வாகனங்களில் எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொறுத்தப்பட்டு வலம் வருகின்றன. இது பற்றி அம்மாநில காவல்துறையிடம் கேட்டபோது, சாலை சந்திப்புகளில் மட்டுமே சில முக்கியப் பிரமுகர்களின் வாகனங்களில் இத்தகு ஒலிப்பான்கள் இயங்குகின்றன. எப்போதும் அவற்றை ஒலிக்கச்செய்வதற்கு அனுமதிப்பதில்லை. அது ஒலிமாசுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்திருக்கிறோம் கூறினர்.

Leave a Reply