குழந்தைகளின் வேண்டுகோளை ஏற்று தாயை கொலை செய்த தந்தைக்கு தண்டனை குறைப்பு
தாயை கொலை செய்த தந்தை ஜெயிலில் தண்டனை அனுபவிப்பதால் தங்களை கவனித்து கொள்ள யாருமில்லை என்றும் அதனால் தண்டனை அனுபவித்து வரும் தங்கள் தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இரண்டு குழந்தைகள் கண்ணீர் மல்க விடுத்த வேண்டுகோளை மதுரை உயர்நீதிமன்ற கிளை ஏற்றுக்கொண்டு, தாயை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையில் இருந்து 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்குமார். இவரது மனைவி அனிதா. 12.12.2011ஆம் ஆண்டு கணவன், மனைவி இருவரும் சண்டையிட்டனர். அப்போது அனிதாவின் தந்தை வீட்டிற்கு வந்தார். இந்நிலையில், அறைக்குள் அனிதா சடலமாக கிடந்தார். இதையடுத்து அனிதாவை கொலை செய்ததாக செல்வராஜ் குமாரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 6.11.2013-ல் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கொலை சம்பவம் அறைக்குள் நடைபெற்றுள்ளது. அதை யாரும் கண்ணாமல் பார்க்கவில்லை. ஆனால் அந்த அறையில் இருந்து அரிவாளுடன் மனுதாரர் வந்ததை அவரது மாமனார் மற்றும் பக்கத்து வீட்டினர் பார்த்துள்ளார்.
அந்த அறைக்குள் மனுதாரரை தவிர வேறு ஆள்கள் இல்லை. எனவே, மனுதாரர்தான் கொலை செய்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த கொலை திட்டமிட்டு நடைபெற்ற கொலையாக கருத முடியாது. கொலை நடைபெறுவதற்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக கொலை நடந்துள்ளது. மனைவியின் பேச்சு மனுதாரரை கொலை செய்ய தூண்டியிருக்கலாம். ஆத்திரம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. இதனால் கொலைப்பிரிவில் மனுதாரருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது தவறு.
மேலும், மனுதாரரின் இரு மைனர் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தந்தையை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளனர். தங்களை பார்க்க தந்தையை தவிர வேறுயாரும் இல்லை என்றும், தற்போது பாட்டியிடம் வசிப்பதாகவும், பாட்டிக்கும் வயதாகிவிட்டது. எனவே தங்களை கவனிப்பதற்காக தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என உருக்கமாக கேட்டுக்கொண்டனர். இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.