திடீரென பற்றி எரிந்த ஏரி! பெங்களூரில் பரபரப்பு
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள புகழ் பெற்ற ஏரியான பெல்லந்தூர் என்ற ஏரியில் கடந்த சில வருடங்களாக தொழிற்சாலைகளின் கழிவுப்பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்து வருவது குறித்து அந்த பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த ஏரியை தூய்மைப்படுத்தும் பணி சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஆனால் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் இன்னும் 10% பணி கூட முடிவடையவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று நண்பகல் பெல்லந்தூர் ஏரியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு ஏரியின் மையத்தில் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியின் குடியிருப்பு மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு உடனடியாக விரைந்த அவர்கள், ஏரியின் மையப்பகுதியில் தீப்பற்றி இருப்பதால், அதனை அணைக்க போதிய வசதிகள் இல்லை என்று கூறி கைவிரித்தனர். பின்னர் வருணபகவானின் உதவியால் தூறல் போட தீ தானாகவே அணைந்தது.
இதற்கு முன்னர் கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இதேபோன்று பெரிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அரசும், அதிகாரிகளும் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.