ஆரோக்கிய வாழ்வுக்கு அரோமா தெரப்பி!

p36c

வீட்டில் வாரத்துக்கு இருமுறை சாம்பிராணி காட்டுவது. கற்பூரம் ஏற்றுவது, நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவது எல்லாம், வீட்டில் எப்போதும் இனிய நறுமணங்கள் உலவ வேண்டும் என்பதற்காகத்தான். இந்த வாசனைகள் மனதுக்கு அமைதி தரும். நோய்களை விரட்டும். சாணம் தெளித்துக் கோலம் போடுவது, ஆண்டுக்கு ஒரு முறை சுண்ணாம்பு அடிப்பது, வீட்டைச் சுற்றி வாசனை நிறைந்த மலர்ச் செடிகளை வளர்ப்பது என நம் முன்னோர்கள் செய்துவந்த ஒவ்வொன்றிலும் மறைந்திருக்கிறது அரோமா தெரப்பி என்கிற நறுமண சிகிச்சை.

வேர், இலைகள், மரப்பட்டை, கிளைகள், பூக்கள், விதைகள், மொக்கு போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய்களை வைத்து செய்யும் சிகிச்சைதான் அரோமா
தெரப்பி. நம் மூக்கினுள் இருக்கும் சிலியா (Cilia) என்கிற முடிபோன்ற அமைப்பு, காற்றில் கலந்திருக்கும் வாசனையை ஈர்த்து, அதுபற்றிய சிக்னலை மூளைக்கு அனுப்பும். இந்த சிக்னல்மூளை செல்களைத் தூண்டி, உடலின் சில உறுப்புக்களின் செயல்திறனைத் தூண்டிவிடும். பொதுவாக, நம் உடலில் ஏற்படும் நோய்கள் 50 சதவிகிதம் மருந்துகள் மூலமாகவும் 50 சதவிகிதம் நமது உளவியலாலும் குணமாகக் கூடியவை. உளவியல்ரீதியாக நோயைக் குணப்படுத்த அரோமா தெரப்பி உதவுகிறது. எந்த எண்ணெயாக இருந்தாலும் ஒரு நிமிடம் முகர்ந்தாலே போதும்.

நினைவுத்திறனுக்கு…

ரோஸ்மெரி, ஜெர்மன் புளு சமொமைல் (German Blue Chamomile), மல்லி போன்ற பல்வேறு மலர்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும். ரோஸ்மெரி எண்ணெய், ஞாபகமறதியைச் சரி செய்யும். சமொமைல், மூளையைச் சுறுசுறுப்பாகச் செயல்படவைக்கும். மல்லிகை, தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் சோர்வைப் போக்கி புத்துணர்வு அளிக்கும். இவை அனைத்தும் மாணவர்களிடம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். இந்த எண்ணெய்கள் ரோல் ஆன் வடிவில் கிடைக்கின்றன. படிக்கும் முன் உள்ளங்கையில் இரண்டு சொட்டு எண்ணெயை விட்டு, முகர்ந்த பிறகு படிக்கலாம். 15 நாட்களுக்கு தொடர்ந்து செய்துவந்தால், வித்தியாசத்தை உணர முடியும். அதன் பிறகு, எப்போது தேவைப்படுகிறதோ, அப்போது பயன்படுத்தினால் போதும்.

மன உளைச்சல் நீங்க…

மெல்லிசா (Melissa), மிர் (Myrrh) போன்ற எண்ணெய்களின் வாசம் அறை முழுவதும் பரவி, மனஅமைதி கிடைக்கச் செய்யும். மெல்லிசா எண்ணெய் மன அமைதியை ஏற்படுத்தும். மிர் உடலில் உள்ள ஆல்ஃபா, பீட்டா செல்கள் அதிகமாவதைக் கட்டுப்படுத்தும். இது, சென்ட் பாட்டில் மற்றும் ரோல் ஆன் வடிவங்களில் கிடைக்கிறது. உள்ளங்கையில் சில துளிகள் விடலாம் அல்லது படுக்கும் அறையில் சில துளிகளைத் தெளிக்கலாம். தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். எதிர்மறை எண்ணங்கள் மறையும்.   மன உளைச்சலில் அவதிப்படுபவர்களுக்கு ஆன்டி டிப்ரஷன் டிப்ஃயூசர் நன்மையைச் செய்யும். முதலில், ஒரு மாதம் தொடர்ந்து நுகரலாம். பிறகு, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

பாதுகாப்பான இதயத்துக்கு

ஹெலிசைசம் (Helichysum) மற்றும் லாங் லாங் (Ylong Ylong) எண்ணெய்கள் இதயப் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. இதயத் துடிப்பை சீர்செய்யும். இதயச் சுவர்களில் ஏற்பட்ட வலியைக் குறைக்கும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தும். பதற்றத்தை நீக்கும். கெட்ட  கொழுப்புச் சேர்வதைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற காரணங்களால் வரும் இதயப் பாதிப்புகளுக்கு சிறந்த முதலுதவி. இதயப் பிரச்னை இருப்பவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள் தினமும் இருமுறை இந்த வாசத்தை முகரலாம். இதை முகர்ந்தால், 15 நொடிகளில் இதயம் இயல்புநிலைக்கு வந்துவிடும். திடீரென்று மாரடைப்பு வலி ஏற்பட்டால், முதலுதவியுடன், இந்த வாசனையையும் முகரச் செய்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லலாம்.

கணையம் ஆரோக்கியம்

நறுமணத்துக்கும் சுவைக்கும் சேர்க்கப்படும் பட்டையில் (Cinnamon) இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை முகரும்போது, சர்க்கரை நோய், கணையத்தில் இன்சுலின் சுரப்பு சீரற்ற நிலை கட்டுக்குள் வரும். பட்டை எண்ணெயுடன் நான்கைந்து காம்பினெஷன் எண்ணெய் வகைகளும் சேர்த்து சுவாசிக்கலாம். இந்தக் கலவையை அரோமா தெரப்பிஸ்ட், அந்தந்த நோயாளிக்கு ஏற்ப பரிந்துரைப்பார். தினமும் ஐந்து வெண்டைக்காய்களைப் பச்சையாக சாப்பிட, இன்சுலின் சுரப்பு சீராகும்.

சரும சுருக்கத்துக்கு…

மரத்திலிருந்து வரும் பிசின் மூலம் எடுக்கப்படும் ஃப்ரான்கின்சென்ஸ் (Frankincense) எண்ணெயுடன் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் பூசலாம். சரும சுருக்கங்கள் நீங்கி, புத்துணர்வு நிறைந்த இளமையான சருமத்தைப் பெறலாம். மூப்படைதலைத் தாமதப்படுத்தலாம். முகத்தைச் சுத்தமாகக் கழுவி, ஆவி பிடித்து, முகத்தில் எண்ணெய்களை பூசி, மசாஜ் செய்து, 40 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இதன் மூலம், ரத்த ஓட்டம் சீராகும். தசைகளின் இறுக்கம் குறையும். ரிலாக்ஸான உணர்வு கிடைக்கும். முகம் பளிச்செனப் பிரகாசிக்கும். முதலில் மூன்று நாட்கள் இதைச் செய்ய வேண்டும். பிறகு, வாரத்துக்கு அல்லது மாதத்துக்கு ஒருமுறை என சருமத்தின் தன்மையைப் பொருத்துச் செய்யலாம்.

எதிர்மறை எண்ணங்கள் நீங்க…

ஜெர்மன் ப்ளு சமொமைல், ரோஸ் ஒட்டோ  (Rose otto), ஏஜ்ஜெலிக்கா (Angelica) போன்ற எண்ணெய்கள் மனப் பதற்றத்தைக் குறைத்து, அமைதியடையச் செய்யும். தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு மூளை சரியாகச் செயல்படும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, தன்னம்பிக்கை துளிர்விடும். எதற்கெடுத்தாலும் பயம், பதற்றம் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ அல்லது மற்றவருக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ எனத் தேவையற்ற கற்பனைகளால் குழம்புபவர்கள், ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம். நல்ல மாற்றம் தெரியும். பிறகு, மாதம் இருமுறை முகரலாம்.

Leave a Reply