எலும்பின் உறுதித்தன்மை
தொடர்ந்து பயிற்சி செய்வது, எலும்பை சுறுசுறுப்பாக வைத்திருக்கச் செய்யும். இதனால், எலும்புகள் கால்சியத்தைக் கிரகித்து, உறுதிபெறும். ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும்.
கொலஸ்ட்ரால்
நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பான எல்.டி.எல்-ஐ அகற்றும் தன்மை கொண்டது. கார்டியோவாஸ்குலார் பயிற்சிகள் செய்வதன் மூலம், உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும். கெட்ட கொழுப்பு குறையும்
ரத்த அழுத்தம்
சீரான ரத்த ஓட்டம் பாய்வதன் மூலம், ரத்தக் குழாயின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மன அழுத்தத்தைக் குறைக்கும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
இதய ரத்தக் குழாய் ஆரோக்கியம்
நடை, மெதுஓட்டம், ஓட்டம், நீச்சல், ஏரோபிக் போன்ற இதயத்துக்குப் பலம் தரும் பயிற்சிகள் செய்வதால், உடலில் உள்ள திசுக்களுக்கு அதிக அளவு ரத்தம் கொண்டுசெல்லப்பட்டு அதன் மூலம் ஆக்சிஜன் கிடைக்கிறது. தொடர்ந்து, இந்தப் பயிற்சிகளைச் செய்துவரும்போது, இதயத் தசைகள் வலுப்பெறும். தேவையான நேரத்தில் அதிக வேலையும், ஓய்வு நேரத்தில் குறைந்த வேலையும் செய்ய இந்தப் பயிற்சிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
உடல் எடைப் பராமரிப்பு
பலருக்கு உணவுக் கட்டுப்பாடு என்றாலே கடினம்தான். இவர்களுக்கு மிகச் சிறந்த நண்பன் உடற்பயிற்சி. இதன்மூலம், அதிக அளவில் கலோரியை எரித்து, உடல் எடை அதிகமாவதைத் தடுக்கலாம். தொடர் பயிற்சி, உடல் எடையைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தைச் சீராக்குகிறது.
தூக்கம்
தினமும் உடற்பயிற்சி செய்வது தூக்கத்தைத் தருகிறது. உடற்பயிற்சி செய்பவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.