பிணவறை உதவியாளர் பணிக்கு போட்டி போடும் பி.எச்.டி பட்டதாரிகள்: வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சகட்டம்
மேற்கு வங்காளத்தில் பிணவறை உதவியாளர் தற்காலிக பணிக்கு பி.எச்.டி, எம்.பில் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா அரசு தலைமை மருத்துவமனையில் பிணவறை உதவியாளர் தற்காலிக பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு எனவும் அந்த மருத்துவ நிர்வாகம் கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த தற்காலிக பணிக்கு மொத்தம் 315 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த 315 பேரில் ஆராய்ச்சி படிப்பு முடித்த பி.எச்.டி, எம்.பில் மற்றும் முதுகலைப்பட்டதாரிகளும் அடக்கம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாலும் , ஆராய்ச்சி படிப்புகளின் தரம் தாழ்ந்துள்ளதாலும் பி.எச்.டி, எம்.பில் மற்றும் முதுகலைப்பட்டதாரிகளும் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலுவலக துப்புரவு பணியாளர்கள் பணிக்கு பி.எச்.டி முடித்தவர்கள் போட்டிபோட்டனர் என்பது குறிப்பிடதக்கது.