கால்சியம் சத்து நிறைந்த இலந்தை பழம்

fruit

இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்க்கலாம் இலந்தைப் பழத்தில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை. சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும்.

இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே. இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும். உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.

பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும்.

இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும். பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது. கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.

Leave a Reply