ஓர் ஆண்டுக்கு முன்பு பயன்படுத்திய மாத்திரைகள், ஆறு மாதங்களுக்கு முன்பு வாங்கிய இருமல் சிரப்புகள் வீட்டில் கிடக்கும். மீண்டும், எப்போதாவது காய்ச்சல், இருமல் வந்தால் அப்போது பழைய மருந்துகளை, சுயமாக சாப்பிடுவோம். நாம் உண்ணும் மருந்துகள் பாதுகாப்பானதா? அவை காலாவதியாகிவிட்டதா? இந்த விவரங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் மருந்துகளை உட்கொள்வது சரியா?
மக்கள் அதிகம் பயன்படுத்தும் தலைவலி, சளி, காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்கான மாத்திரைகளில்தான் காலாவதியான மருந்துகள் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளன. தலைவலி, காய்ச்சல் என எந்த ஒரு பிரச்னைக்கும் சுயமாக மாத்திரை வாங்கிப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். டாக்டர் பரிந்துரைச் சீட்டைக் காட்டியே மருந்தை வாங்க வேண்டும். எந்த ஒரு மருந்தை வாங்குவதற்கு முன்பும், காலாவதி தேதியைப் பார்த்து வாங்க வேண்டும். காலாவதியான தேதிக்குப் பிறகு மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. வாங்கும் மருந்துக்குக் கடையில் ரசீது வாங்க வேண்டும் என்பன போன்ற விழிப்புஉணர்வு மிக அடிப்படையான அவசியமான பாடம்.
எந்த ஒரு மருந்தும், அதன் செயல்பாட்டு அளவு, வயது, அவரது உடல்நிலை, நோயின் தன்மை என பல விஷயங்களைக் கருத்தில்கொண்டுதான் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, ஒருமுறை பயன்படுத்திய மருந்துகளை வீட்டில் பாதுகாப்பது தவறு.
அலுமினியம் ஃபாயிலில் பேக் செய்யப்பட்டு விற்கப்படும் மாத்திரையை, ஒருமுறை பிரித்தவுடன் சாப்பிட்டுவிட வேண்டும். எந்த மருந்துகளையும் பிரித்த பிறகு, அதன் வீரியம் குறையத்தான் செய்யும். ஒரு மாதத்துக்குச் சாப்பிடக் கொடுக்கும் பாட்டில் மாத்திரைகளை, ஒவ்வொரு முறை திறக்கும்போதும், கொஞ்சம் கொஞ்சமாக மருந்துகளின் வீரியங்கள் குறைந்துகொண்டே போகும். எனவே, மருத்துவர் பரிந்துரைத்த காலத்துக்கு மட்டும் மாத்திரை, மருந்தை வாங்க வேண்டும்.
மலேரியா, டைபாய்டு காய்ச்சலுக்கு 10 நாட்களுக்கு மாத்திரை பரிந்துரைத்தால், 10 நாட்களுக்கான மருந்தை மட்டும் வாங்க வேண்டும். 10 நாட்களும் அதைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் நோய் பாதிப்பில் இருந்து முற்றிலுமாகக் குணமடைவதுடன், வீட்டில் வீணாக மாத்திரைகள் சேர்வதும் தவிர்க்கப்படும். சிரப், சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தியவுடன், சரியாக மூடி வைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இதன் வீரியம் குறையத் தொடங்கும். சொட்டு மருந்துகளைத் திறந்த ஒரு மாதத்துக்குப் பிறகு பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
காலாவதியான மாத்திரைகள், மருந்துகளில் வீரியம் குறைந்திருக்கலாம் அல்லது பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் உருவாகி இருக்கலாம். அவற்றைச் சாப்பிடும்போது, நாம் எந்தக் காரணத்துக்காக சாப்பிடுகிறோமா, அந்த நோய் சரியாகாமலே இருக்கும். எந்தப் பிரச்னைக்கு மாத்திரை சாப்பிடுகிறோமோ, அதன் பாதிப்பு குறையாமலே இருக்கும். காலாவதியான மாத்திரைகளைத் தொடர்ந்து, சாப்பிடுபவர்களுக்கு, பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆனால், இதனால்தான் வந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
உயிர் காக்கும் மாத்திரைகளான, நைட்ரேட் எனும் நெஞ்சு வலி மாத்திரை, அட்ரினலின் (Adrenaline) ஊசி போன்ற மருந்துகள் காலாவதியான பிறகு, அவற்றை அவசரத் தேவைக்கு, எந்த நோயாளிக்காவது கொடுத்தால் அதன் பலன் கிடைக்காமல், நோயாளிகள் உயிர் இழக்கவும் நேரிடலாம். இது, காலாவதி மாத்திரையின் பக்கவிளைவு கிடையாது. ஆனால், மாத்திரையின் செயல்பாட்டுத் திறன், நோயாளிக்கு உரிய நேரத்தில் செல்லாததால் ஏற்படும் விளைவு.
அதுபோல, கண்களில் போட வேண்டிய சொட்டு மருந்து, காலாவதியான பிறகு கண்களில் போட்டால் தொற்றுக்கள் ஏற்படலாம். கண், காது போன்ற நுட்பமான பகுதிகளில் செலுத்தப்படும் மருந்துகளால், சிறிய பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, எந்தத் தேவைக்குமே காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பதே நல்லது.
மருந்து காலாவதியாகும் மாதம் மற்றும் வருடம் மட்டுமே குறிப்பிடப்படும். ஜூலை மாதத்தில் மாத்திரை காலாவதியாகும் என்றால், ஆகஸ்டு மாதம் அதைப் பயன்படுத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. அந்த மருந்து அதிகமாக செயல்படலாம் அல்லது குறைவாக செயல்படலாம். எந்த தேவைக்காகச் சாப்பிடுகிறோமா, அதற்கான பலனை அளிக்காது.
மாத்திரைகளின் மூலக்கூறுகளில் மாறுதல்கள் ஏற்பட்டு, வயிற்று உபாதைகள் ஏற்படலாம். மாத்திரைக் கழிவுகள் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் தங்கியிருக்கும் என்பதால், தொடர்ந்து காலாவதி மாத்திரைகளைச் சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பெரிய பாதிப்புகள் ஏற்படுத்தலாம்.
நீண்ட நாட்களாகிவிட்ட காலாவதியான மாத்திரைகள் பொடியாக உடையத் தொடங்கும். இது மருந்தே அல்ல, ‘மருத்துவக் கழிவு’ என்ற புரிதல் அவசியம்.
கவனிக்க…
சாதாரணக் காய்ச்சல் முதல், உயிர் காக்கும் மாத்திரைகள் வரை எதுவாக இருந்தாலும் காலாவதித் தேதியைச் சரிபார்த்து வாங்கவேண்டும்.
எப்போதும் பயன்படுத்தக்கூடிய சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மாத்திரைகளின் காலாவதித் தேதியைச் சரியாகப் பார்த்து வாங்குவது அவசியம்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்றவைக்கு, நேரடியாகக் கடையில் சென்றோ, நண்பரைக் கேட்டோ மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது. அவசரத் தேவைக்கு, மாத்திரைகளை வாங்கி வைத்திருக்கலாம். காலாவதியாகும் தேதியை குறித்துவைத்து, தக்க சமயத்தில் மாற்றிவிட வேண்டும். இல்லை எனில், அவசர காலத்தில் பயன்படாமல் போய், உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.
குறைந்த காலத்திலேயே காலாவதித் தேதியை எட்டிவிடும் மாத்திரைகளைத் தவிர்க்கலாம்.
நோயின் தன்மை, பாதிப்பு எனப் பல விஷயங்களை ஆராய்ந்தே மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, மருத்துவர் பரிந்துரைத்தக காலத்துக்கு அந்த மருந்தைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே காய்ச்சல் வந்தால், டாக்டர் பரிந்துரைத்த மருந்தாக இருந்தாலும்கூட, மறுமுறை மருத்துவரைக் கேட்காமல் அதைப் பயன்படுத்தக் கூடாது.
தவிர்க்க முடியாத சூழலில் வலி நிவாரணி மாத்திரைகளைப் போட வேண்டும் என்றால், பாராசிட்டமால் மாத்திரை பயன்படுத்தலாம். காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகளிலிருந்து தற்காலிகமாக விடுபட ஏற்றது. ஆனால், இவற்றை வாங்கும்போது, காலாவதி தேதியைப் பார்த்து, அவற்றை டைரியில் குறிப்பிட்டு எழுதிக்கொள்வது நல்லது.
இரண்டு, நான்கு என்ற மாத்திரைகளை வாங்கினாலும்கூட, காலாவதி தேதி அட்டையிலிருந்து கிழிக்கப்பட்டிருந்தால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
காலாவதி மாத்திரை செடிகளுக்கு உரமல்ல!
மாத்திரைகளை நுணுக்குவதோ, கரைப்பதோ கூடாது. வீட்டுக் கழிப்பறையில் போட்டு ஃப்ளஷ் செய்யக் கூடாது. கிணறு, ஏரி, கால்வாய், ஆறு போன்ற நீர் நிறைந்த இடங்களில் தூக்கிவீசக் கூடாது.
செடிகள், மரங்கள் போன்றவற்றுக்கு உரமாகவும் போடக் கூடாது. செல்லப் பிராணிகளுக்கும் கொடுக்கக் கூடாது.
வைட்டமின் மாத்திரைகளுக்குக்கூட காலாவதித் தேதி இருக்கும். சத்து மாத்திரைதானே என்று தொடர்ந்துபயன்படுத்திக்கொண்டே இருக்கக் கூடாது.
ஒரு கவரில் போட்டு, ‘மருத்துவக் கழிவுகள்’ என்று எழுதி, குப்பைத் தொட்டியில் போடலாம். அல்லது குழிதோண்டி மருந்துகளைக் கொட்டி, மண்ணில் புதைக்கலாம்.