இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகள் கலீமா, தொழுகை, நோன்பு, ஜகாத் (ஏழை வரி), ஹஜ் ஆகியவை.இதில் நான்காவதான ஜகாத்தில் தான், குர்பானி என்பது கடமையாக்கப்படுகிறது. குர்பானி என்றால் இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துதல் என்று பொருள். இபுராகிம் நபி அவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை பிறக்காத வருத்தத்தில், தனக்கு ஒரு குழந்தை பிறந்தால், அதை இறைவழியில் பலியிடுவதற்கு கூட தயார் என்று உறுதி எடுத்தார். இறைவன் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு காரணமாக இந்த உறுதியை அவரால் எடுக்க முடிந்தது. இதன்பிறகு, குழந்தை பிறப்பது போலவும், அது நடந்து வரும் வயதை எட்டுவது போலவும் கனவு கண்டார். முதல்நாள் கனவின் போது, அது சைத்தானின் புறத்திலிருந்து வந்த வெளிப்பாடாக இருக்கலாம் என நினைத்தார். ஆனால், அதையடுத்து வந்த நாட்களிலும் குழந்தையை அறுத்து பலியிடுவது போல கனவு கண்டார்.
அதன்பிறகே அதை வஹி (இறைவனிடம் இருந்து வரும் துாதுச் செய்தி) என்று எடுத்துக் கொண்டார். ஏனெனில், நபிமார்களுக்கு வரும் கனவு கூட இறைவனின் துாதுச் செய்தியாகவே கொள்ளப்படும்.இந்த கனவுக்கு பிறகு, உண்மையிலேயே குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயரிட்டு, பலியிட முற்பட்டார். அதற்கு எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.கத்தியை எடுத்து கழுத்தை நோக்கி கொண்டு செல்லவும், குழந்தையின் கழுத்து அறுபடாமல் இருக்க இறைவன், கத்திக்கு கட்டளையிட்டு விட்டார். எனவே, இபுராஹிம் நபி, குழந்தையின் கழுத்தை அறுக்க முற்படும் போது கழுத்து அறுபடவில்லை. எனவே அந்த கத்தியை துாக்கி எறிந்தார். அது ஒரு பாறை மீது பட்டு, பாறையே இரண்டாகப் பிளந்தது.
இப்போது, இறைவன் அந்த கத்திக்கு இட்ட கட்டளை விடுபட்டு போனது.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், உலகிலுள்ள எந்த வஸ்துவுக்கும் எந்த சக்தியும் கிடையாது. அதைப் போல எந்த சாதனத்தைக் கொண்டும் நம்மால் ஏதும் சாதிக்க முடியாது. அதில் இறைவனின் கட்டளை இருக்க வேண்டும்.இறைவனின் கட்டளை மீது இபுராகிம் நபி அவர்களுக்கு அந்தளவு நம்பிக்கை இருந்தது. அதனால் குழந்தையை பலியிட தயாரானார். அவரது தியாகத்தை இறைவன் புரிந்து கொண்டு, குழந்தைக்கு பதிலாக சொர்க்கத்தில் இருந்து ஒரு ஆட்டை இறைத்துாதர் ஜிப்ராயில் (அலை) மூலமாக அனுப்பி வைத்தான்.
“இதை நீங்கள் அறுங்கள். பின்னர் வரும் உங்கள் சமுதாயத்துக்கும் இதை எடுத்துரையுங்கள். இதை வழிமுறையாகவும் ஆக்குங்கள்,” என்றார்.நபிகள் நாயகம் அவர்களிடம் அவரது தோழர்கள் “குர்பானி என்றால் என்ன? என்று கேட்டனர்.“இது உங்களுடைய தந்தை இபுராகிம் (அலை) அவர்களின் வழிமுறையாக இருக்கிறது,” என்றார் நபிகள் நாயகம். “இதைக் கொடுப்பதால் எங்களுக்கு என்ன நன்மை?” என்று தோழர்கள் கேட்க, பலியிடப்படும் ஆட்டின், அத்தனை ரோமங்களின் அளவுக்கு யாரெல்லாம் குர்பானி கொடுக்கிறார்களோ, அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும்,” என்றார் .ஆடு அறுக்கப்பட்டு அதன் ரத்தம் பூமியில் முதல் சொட்டு விழுவதற்கு முன்பே அவனுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகிறது. இதையே இஸ்மாயில் நபி அவர்களின் வழித்தோன்றல்களான நாமும் இன்று வரை செய்து வருகிறோம். இந்த குர்பானியை இறைவனுக்காக கொடுக்க வேண்டுமே தவிர, புகழுக்காக, பெயருக்காக, பகட்டுக்காக கொடுக்கக் கூடாது. அறுக்கப்படும் ஆடு, நல்ல கொழுத்த ஆடாக இருக்க வேண்டும்.
யார் பெயரால் ஆடு அறுக்கப்படுகிறதோ, அவனது உள்ளத்தையே இறைவன் பார்க்கிறான். எந்தளவுக்கு மனத்துாய்மையோடு அறுக்கிறார்களோ, அந்தளவுக்கு அவர்களுக்கு நன்மையும் கிடைக்கும். பாவங்களும் மன்னிக்கப்படும். ஆடு குர்பானி கொடுப்பது ஒரு நபருக்கு மட்டுமே. ஜகாத்துக்கு கடமையானவர்கள் அனைவரும் குர்பானியை நிறைவேற்ற வேண்டும். இந்த அடிப்படையில், நாம் பக்ரீத் திருநாளன்று இந்த குர்பானியை நிறைவேற்றுகிறோம்..