சென்னை: போதேந்திராள் மேடை காவியத்தின் வெற்றியை தொடர்ந்து, மகாலட்சுமி பெண்கள் நாடக குழுவின் மற்றுமொரு வெற்றிப்படைப்பாக, கடந்த ஏப்., 2 முதல், சபாக்களில் உலா வந்து கொண்டிருக்கிறது, பஜகோவிந்தம்.
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்… பஜகோவிந்தம் முடமதே! ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக் ஷதி டுக்ருஞ்கரணே என்ற, சமஸ்கிருத வாசகங்களுக்கு சொந்தக்காரரான, ஆதி சங்கரரின் வாழ்க்கையை, சமகாலம், காஞ்சி பெரியவர் காலம் கொண்டு, சாதாரண மனிதனின் வாழ்வின் தத்துவ முடிச்சுகளை அவிழ்க்கும் சூத்திரமே, பஜகோவிந்தம் நாடகம்.
தன் காலடியால்…: மலையாள மொழி தோன்றாத காலத்தில், கேரளாவின் காலடியில் பிறந்து, பாரத தேசத்தை, தன் காலடியால் மும்முறை அளந்த ஆதிசங்கரரின் வாழ்க்கையை, அற்புத காட்சிகளாக மாற்றியிருக்கிறார், பாம்பே ஞானம். குழந்தைகள் முதல், முதியோர் வரையிலான, அத்தனை ஆண், பெண் பாத்திரங்களையும் எந்த பாகுபாடும் தெரியாத வகையில், அற்புதமாக கண் முன் நிறுத்துகின்றனர், பெண்களே நடிக்கும், நாடக குழுவினர். அஞ்ஞானம் பேசும் விஞ்ஞானி, அவரை கரித்துக்கொண்டும் சராசரி மனைவி மீனு, அத்தனையையும் வியாபாரமாக பார்க்கும் ஆஞ்சநேயலு, அவர்களுக்கு வாழ்வின் தத்துவத்தை, ஆதி சங்கரரின் வாழ்க்கை மூலம் விளக்கும் காஞ்சி பெரியவர் என, அறிமுகமாகிறது பஜகோவிந்தம். பாத்திரங்களுக்கு ஏற்ற ஒப்பனை, உடையலங்காரம், பதியப்பட்ட குரல், பின்னணி இசையுடன், காட்சிக்கேற்ற அரங்க அமைப்பு என, எடிட் செய்யப்பட்ட திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை தந்து, ரசிகர்களை வெற்றி கொள்கிறது, பஜகோவிந்தம். ஆர்யாம்பாளிடம் இருந்து எட்டு வயதில் விடைபெற்று, கவுடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதம் கற்கிறான், சங்கரன். வேதமும், தத்துவமும், அற்புதங்களும் நிரம்பிய படி, வளரும் சங்கரனுக்கு, காசியில் தான் அத்வைத தத்துவத்துக்கான வித்து கிடைக்கிறது. ஆத்மா, பரமாத்மா, ஜீவாத்மா குறித்த தெளிவு கிடைக்கிறது.
நடப்பது நாடகமா!: பின், சம்சாரம் என்பவள் யார்? வாழ்க்கை என்பது என்ன? காரியங்களுக்கு பின் உள்ள காரணங்கள் யாவை என்பதை விளக்கி, சங்கரரின் பாதம், பாரதத்தை அளக்கிறது. நடப்பது நாடகமா! என்பதை, மெய் மறந்து கிடக்கின்ற ரசிகர்களின் மனதில் மண்டிக்கிடந்த இருள் விலகுவதை, அவர்களின் முகத்தோற்றம் தெரிவிக்கிறது. முடிவில், அவர்கள் பஜகோவிந்தம் பாடிய படியே வெளியேறுகின்றனர். நீங்களும், பஜகோவிந்தம் பாட நினைத்தால், இன்றும், நாளையும் (மே, 16, 17) மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்க்கு சென்று வாருங்கள்.