முட்டாளாக இருந்தாலும் தமிழன் தான் முதல்வராகணும். பாரதிராஜா
பொதுவாக ஆட்சியில் இருப்பவர்கள் திறமையானவர்களாகவும், ஆளுமை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவதுண்டு. ஆனால் இயக்குனர் இமயம் பாரதிராஜா, ‘முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை, தமிழகத்திற்கு தமிழன் தான் முதல்வராக வரவேண்டும்’ என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
‘ஆந்திராவிலோ, மராட்டியத்திலோ, கர்நாடகாவிலோ நான் போய் தலைவனாக முடியுமா? மந்திரியாக முடியுமா? பிச்சிடுவான். மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு நீதி, எங்களுக்கு மட்டும் ஒரு நீதியா? ஏன்னா பரந்துவிரிந்த இதயத்துக்கு சொந்தக்காரன் தமிழன். முன்னாடி இது ஒரு சமஸ்தானம். அப்ப எல்லா மக்களும் இங்க இருந்தீங்க. மொழிவாரி மாநிலங்கள் பிரிஞ்சு போயிடுச்சுல்ல… உங்கள் மொழிகளுக்கான அமைப்புகளை தனித்தனியா ஏற்படுத்திக்கிட்டீங்கள்ல. அப்ப எங்களை விட்டுடணும்ல.
நீங்க எங்களோடு சகோதர சகோதரிகளா பழகினதால், சென்னையில் தலைநகரம் இருந்த காரணத்தால், உங்கள் சொத்துக்கள் எல்லாம் சென்னையில் இருந்ததால் இங்க இருந்துகிட்டு இன்னைக்கு அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க. எங்களோடு சேர்ந்து ‘நான்தான் தலைவர்’னு சொல்லிட்டு இருக்கீங்க. உனக்கு என்ன தெரியும்? என் அய்யனார் கோயில் திருவிழா தெரியுமா? தைப்பொங்கல்னா என்னனு தெரியுமா? இதோ மாடு வெட்டாதனு சொல்லிட்ட. இங்க பிறந்தவனுக்குத்தான் என் பூமி பற்றி தெரியும்.
‘தமிழ், தமிழ்னு பேசுறீயே, நீ என்ன இலக்கியம் படிச்சிருக்க’னு நீங்க என்கிட்ட கேட்கலாம். என் ஆத்தா கத்துக்கொடுத்த மொழி, எங்க ஆத்தாட்ட குடிச்ச பால். அதை எப்படி நான் மாத்த முடியும்? அந்தக்கோவம்தான். ‘எல்லாரும் சேர்ந்து தொழில்நடத்துவோம். அரசியலே பேசுவோம். ஆனா சி.எம்.ங்கிற அந்தத் தலைமைப்பதவியில நாங்கதான் இருப்போம். எவன் தமிழ்த் தாய்ப்பால் குடிச்சு வளர்ந்தானோ அவனுக்கு மட்டும்தான் அந்த தலைமைப்பதவி, அவன் முட்டாளாவே இருந்தாலும் சரி. ஏன்னா இந்த மண்ணை தீர்மானிப்பதில், இந்த மக்களை தீர்மானிப்பதில் அவன் சோரம் போகமாட்டான்னு ஒரு நம்பிக்கை. அப்படி காமராஜருக்குப்பிறகு ஒரு பச்சைத்தமிழன்கூட வரலையே?’’