ஏர்டெல் வசமானது டெலினார் இந்தியா. பங்குச்சந்தையில் முன்னேற்றம்
இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி இடத்தில் உள்ள ஏர்டெல், சக துறை நிறுவனமான டெலினார் இந்தியாவை வாங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி வந்தது முதல் இன்றைய பங்குச்சந்தைகள் தொடக்கத்தில் இருந்தே ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ஏர்டெல்-டெலினார் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நிறைவேறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இதுவரை டெலினார் இந்தியா வசம் உள்ள பீகார், ஆந்திரா, அசாம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 தொலைத்தொடர்பு வட்டங்கள், இனி ஏர்டெல் வசம் வந்துவிடும் என தெரிகிறது..
ஏற்கனவே இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள ஏர்டெல் இந்த ஒப்பந்தம் காரணமாக நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவை மேலும் வலுப்பெறும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.