மருமகன் திருமணத்தில் தாவூத் இப்ராஹிம் பங்கேற்பா? மும்பையில் பரபரப்பு
மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமை பிடிக்க இந்தியா பல வருடங்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தாவூத் இப்ராஹிமின் சகோதரி மகன் அலிஷா திருமணம் நாளை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறவுள்ளது. மருமகன் திருமணத்திற்கு தாவூத் இப்ராஹிம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படினும் அது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் மணமக்களுக்கு ஸ்கைப் வாயிலாக ஆசி வழங்கலாம் என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியை மும்பை போலீசாரும், உளவுத்துறையும் ஆழ்ந்து கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.