பீகாரில் பி.ஜே.பி ஆட்சி. கருத்துக்கணிப்பில் தகவல்

பீகாரில் பி.ஜே.பி ஆட்சி. கருத்துக்கணிப்பில் தகவல்
bihar
பாராளுமன்ற தேர்தல் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள நிலையில், விரைவில் நடைபெறவுள்ள பீகார் மாநில சட்டசபை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பீகார் மக்கள் என்ன மார்க் போட போகின்றனர் என்பதை நாடே எதிர்நாக்கி காத்திருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என கூறியுள்ளது.

பிரபல செய்தி தொலைக்காட்சியான “ஜி நியூஸ்’ மற்றும் “ஜனதா கா மூட்’ என்ற அமைப்பு ஆகியவை இணைந்து இந்த தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. 243 தொகுதிகளிலும் எடுக்கப்பட்டுள்ள இந்த கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 162 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைக் கொண்ட மகா கூட்டணிக்கு வெறும் 51 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் 30 தொகுதிகளில் இரு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் கூறியுள்ளது.

யாதவ சமூகத்தினரை தவிர பிற அனைத்து சமூக மக்களிடையே பாஜக கூட்டணிக்கே அதிக ஆதரவு உள்ளதாகவும் உயர்சாதி வகுப்பினரில் 65 சதவீதம் பேர் பாஜக கூட்டணியை ஆதரிப்பதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பிகாரில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே, பாஜக கூட்டணிக்கு சாதகமாக கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் எஞ்சியோரில் 58 சதவீதம் பேர், மகா கூட்டணியை ஆதரிப்பதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply