பீகாரில் எம்.எல்.ஏவாக பதவியேற்ற ஆள்கடத்தல் குற்றவாளி
கடந்த ஆண்டு அக்டோபரில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார்-லாலுபிரசாத் கூட்டணி அமோக வெற்றி பெற்று புதிய முதல்வராக நிதீஷ்குமார் பதவியேற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் நேற்றுதான் பதவியேற்றார்.
பிகார் மாநிலத்தின் கோகாமா சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆனந்த் சிங் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியதால் கடந்த 6 மாதங்களாக சிறையில் உள்ளார். இதனால் எம்.எல்.ஏவாக பதவியேற்க முடியாத நிலை இவருக்கு ஏற்பட்டத்.
இந்நிலையில் தன்னை எம்எல்ஏ-வாக பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று பாட்னா ஐகோர்ட்டில் ஆனந்த் சிங் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவர் பதவியேற்க அனுமதித்தது. இதனையடுத்து சிறையில் இருந்த ஆனந்த சிங்கை பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்து வந்தனர். அங்கு, பேரவைத் தலைவர் விஜய் குமார் செளத்ரி, அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின்னர் மீண்டும் பாதுகாப்பாக அவர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆள்கடத்தல் உள்பட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ஆனந்த்சிங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.