மாநிலங்களவையில் நேற்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் தென்னிந்திய பெண்கள் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார். அவருடைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்த தான் எதுவும் தவறாக பேசவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் சரத் யாதவ் பதிலளித்ததால் சிறிது நேரம் மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கனிமொழியின் கோபத்திற்கு காரணமாகும் வகையில் அப்படி என்னதான் பேசினார் சரத் யாதவ். இதோ அவர் பேசியது இதுதான். தென் இந்திய பெண்கள் அழகாக உள்ளனர். அவர்களது உடலமைப்பு மற்றும் அவர்களது தோலின் நிறம் அழகாக உள்ளது. மேலும் நடனமாடுவதில் சிறந்தவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் போன்ற அழகான பெண்களை இங்கு நாம் காணமுடியாது’ என்று பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி எம்.பி, ‘சட்டம் இயற்றுபவர்களே, பெண்களை காட்சி பொருளாக பார்த்தார்கள் என்றால், மற்றவர்களை விட அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று எப்படி கூறமுடியும் என கனிமொழி கேள்வியெழுப்பினார்.
மேலும் சரத் யாதவ் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், திரிணாமூல் தலைவர் டெரிக் ஓ பிரையன், பா.ஜ.க. தலைவர் சம்பித் பத்ரா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் வந்தனா சவான் ஆகியோரும் சரத்யாதவ் கருத்தக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் தான் எதுவும் தவறாக பேசவில்லை என்றும், அதனால் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கடைசி வரை சரத் யாதவ் சாதித்துவிட்டார்.