பித்தம், வாய் துர்நாற்றம், அஜீரணக் கோளாறுகளை தீர்க்கும் தனியா

8d21812d-67a4-4bfa-81bf-6718377955ad_S_secvpf

நம் வீட்டு சமையல் அறையில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும் தனியா என்று அழைக்கப்படும் கொத்தமல்லியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். தனியாவின் மருத்துவத் தன்மை தனிச்சிறப்பு வாய்ந்தது. உடலை சமநிலைப்படுத்தும் வாத, பித்த, கபத்தின் நிலைகளை சீர்ப்படுத்துவதில் தனியாவின் பங்கு அதிகம்.

சமையலில் தினமும் தனியா சேர்க்காமல் சாப்பிடுபவர்கள் இருக்க முடியாது. மசலா பொடியில் தனியாவையும் சேர்த்து அரைப்பார்கள். இது நறுமணத்தையும் சுவையையும் தருவதோடு சீரண சக்தியையும் தூண்டுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றில் உள்ள அபான வாயு சீற்றமாகி மேல் நோக்கி எழும்பி தலைவலியை உண்டாக்குகிறது. சில சமயங்களில் கீழ்நோக்கி சென்று மூலப்பகுதியைத் தாக்கி புண்களை ஏற்படுத்துகிறது.

சீரண சக்தி நன்றாக இருந்தால்தான் மலச்சிக்கல், வயிறு மந்தம் போன்றவை ஏற்படாது. நாம் எத்தகைய கடினமான அதாவது எளிதில் சீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் அதனுடன் மல்லி விதை பொடியையும் சேர்த்துக்கொண்டால் உணவு எளிதில் சீரணமாகும். பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப் புண்களாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் வீசும்.

இவர்கள் மல்லி விதையை வாயில் வைத்து மெதுவாக மென்று உமிழ்நீரை இறக்கினால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும் இதயம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையை பொறுத்தே உடலின் இரத்த ஓட்டம் சீர்பெறும். இதயம் பலப்பட அடிக்கடி உணவில் தனியாவை சேர்த்துக்கொள்வது அவசியம்.

சிலருக்கு சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில் இது புளித்த ஏப்பமாகவும் மாறும். இதனைப் போக்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து வாயில் போட்டு மென்று சாறு இறக்கினால் சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும். பித்த தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் மல்லியை அரைத்து பற்றுபோட்டால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.

கொத்தமல்லி விதை, சந்தனம், நெல்லி வற்றல் இவற்றை நீரில் நன்றாக ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குறையும். சுக்கு தனியா இவற்றை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு, ஒரு கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பொடியைப் போட்டு கஷாயம் போல் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து மாலை வேளையில் அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

Leave a Reply