உலகின் மிகபெரிய செல்வந்தரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இன்னும் 20 ஆண்டுகளில் உலகில் ஏழை நாடுகளே இருக்காது என்று கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் உலகில் வளரும் நாடுகள் முயற்சியால் கண்டுபிடிக்கப்படும் புதுமையான கண்டுபிடிப்புகள் காரணமாக உலகில் ஏழை நாடுகளே இல்லாமல் போகும் நிலை இன்னும் 20 ஆண்டுகளில் வரும் என்றார். அதிக விளைச்சல் தரும் விதைகள், சக்தி வாய்ந்த நோய் தடுப்பு மருந்துகள், தொழில்நுட்பங்கள், முதலீடுகள் முதலியன ஏழை நாடுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், ஏழை நாடுகளில் வாழும் தனிநபர்களின் வருமானம் வரும் 2035ஆம் ஆண்டில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தற்போது இருக்கும் தனிநபர் வருமானத்தை மிஞ்சக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் ஒவ்வொரு வருடமும் ஒரு ஏழை நாட்டிற்கு பெருமளவு நிதியுதவி செய்து அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்கும் பணியை செய்து வருவதாகவும், அதன்பணி தொடர்ந்து நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.