விமானங்களை கடத்தும் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய மசோதா ஒன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளில் விமான பயணிகளின் பாதுகாப்புக்காக சட்ட சீர்திருத்தம் செய்து வரும் நிலையில் இந்தியாவும் விமான பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி விமான கடத்தலில் ஈடுபடுபம் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கவும், கடத்தப்பட்ட விமானத்தைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனமோ அல்லது பாதுகாப்பு அதிரடிப் படையினரோ தடுத்த நிறுத்த முழு அதிகாரம் வழங்கவும், கடத்தப்படும் விமானங்களை இந்திய விமானப்படை வீரர்கள் இடைமறித்து தடுத்து வலுக்கட்டாயமாக அதனை தரையிறக்க அனுமதி வழங்கும் வகையிலும் சட்டத்திருத்தம் செய்ய பாராளுமன்றம் முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவின் முக்கிய கட்டிடங்களை எதிரிகள் விமானம் தாக்க நினைத்தால் அதை சுட்டு வீழ்த்தும் அதிகாரமும் விமானப்படை வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளும் சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் தீவிர அக்கறை கொண்டு வருகின்றனர். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் போன்று இந்தியாவில் நடைபெறுவதை தடுக்கவே இந்த புதிய மசோதா என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.