இந்தியர்கள் குறிப்பாக தமிழக மக்களின் மிகவும் பிரியமான உணவாக இருந்து வரும் பிரியாணி என்ற வார்த்தையை பிரெஞ்சு நாட்டின் அகராதி வரும் 2016ஆம் ஆண்டுமுதல் சேர்க்க முடிவு செய்துள்ளது.
பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற அகராதி லு பெட்டிட் லரோ”. இந்த அகராதியின் 2016ஆம் ஆண்டின் பதிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 150 புதிய வார்த்தைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்தியாவில் புகழ்பெற்ற உணவுப்பொருளான பிரியாணி.
மேலும், தற்போது உலக அளவில் பிரபலமாக இருக்கும் செல்பி என்ற வார்த்தையும் இணைக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி பிரெஞ்சு தத்துவ அறிஞர் பெர்னார்ட் ஹென்றி லெவி, இங்கிலாந்து நடிகர் மைக்கேல் கெய்ன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா, ரொசெட்டா விண்வெளி ஆய்வு நிலையம் மற்றும் பிக்சர் ஸ்டூடியோ உள்ளிட்ட பிரபலமான மனிதர்களும், நிறுவனங்களும் இந்த அகராதியில் சேர்க்கப்படவுள்ளனர்.
மேலும் கோழை, நகைப்புக்குரிய நபர்களைக் குறிக்கும் ‘ஆன் பொலொ’ மற்றும் வீடு அலங்கரிப்பு, சமையல் கலை உள்ளிட்டவற்றை விளக்கும் இணைய வீடியோ காட்சிகள், பட விளக்க புத்தகங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் ‘டுடோ’ உள்ளிட்ட புதிய பிரெஞ்சு வார்த்தைகள் இந்த அகராதியில் இடம்பெறவுள்ளன.
இந்த அகராதியின் புதிய பதிப்பை பிரெஞ்சு நாட்டவர் மட்டுமின்றி உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளை சேர்ந்தவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.