காளிகாம்பாள் கோவிலில் காமடேசுவரர், அருணாசலேசுவரர், நடராசர் ஆகியோர் திருச்சந்நிதிகளும் உள்ளன. நடராசப் பெருமாள் திருச்சந்நிதியில் பிருங்கி முனிவர் மூன்று கால்களுடன் எலும்பும் தோலுமான உடலுடன் காட்சி தருகின்றார்.
இம்முனிவர் இவ்வாறு மூன்று கால்களுடன் காட்சியளிப்பது இத்தலத்திலும், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோவிலிலும் மட்டும் தான். இம்முனிவர் இவ்வாறு நடராசர் சந்நிதியில் மெலிந்து நின்றதற்குக் காரணம், அன்னை சக்தியை அவமதித்தார். அதனால் தமது சக்தியை இழந்து மெலிவடைந்தார்.
பெருந்துறவியான பிருங்கி முனிவர், துறவிகட்கெல்லாம் திருவருள் புரியும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். சக்தியின் அருள் தமக்குத் தேவையில்லை என்று கருதி, எப்போதும் சக்தி சிவனுடன் இல்லாத தருணம் நோக்கி, சிவன் தனித்திருக்கும்போது வழிபட்டு வந்தார்.
எனினும், ஒரு சமயம், சிவனும் சக்தியும் நெருக்கமாக இருக்கக் கண்டு, முனிவர் வண்டு உருவெடுத்து இருவருக்கும் இடையே துளைத்துக் கொண்டு சென்று வலம் வந்து சிவனை மட்டும் வழிபட்டார். அதைக் கண்ட அன்னை சக்தியானவள், இந்த வண்டு இவ்வாறு செய்கின்றதே என்று சிவத்திடம் வினவ, சிவன் அன்னையிடம் உண்மையைக் கூறினார்.
பார்வதி தேவியை வணங்காமல் திரும்பும் அவரை கண்டு கடுஞ்சினம் கொண்டாள் சக்தி. தன்னை வணங்காத முனிவருக்கு தன் சக்தி மட்டும் எதற்கு என்று எண்ணி தன் சக்தியை எடுத்துக்கொண்டள்.
தமது சக்தியைத் இழந்த முனிவர், வெறும் எலும்புக் கூடாய் மாறி நிலையாக நிற்க கூட முடியாமல் குடை சாய்ந்தார் – அவ்வாறு கீழே விழப் போன அவரை, சிவன் தனதுகோலைக் கைப்பிடியாய்த் தந்து காப்பாற்றினார்.
அதன்பின்னர் சிவனிடம்சென்ற உமாதேவியர், இனி நான் உங்களில் ஒரு பாகமாகக் கலந்திட வேண்டும் என்று தமது ஆவலைக் கூற, அதற்கு அண்ணல், அங்ஙனமாயின் நீ விரதம் இருக்க வேண்டும் என்று கூறியருளினார். அவ்வாறே அன்னை சக்தியும் விரதம் இருந்து-தவம் இருந்து-இறைவனோடு இரண்டறக் கலந்து விளங்க, இறைவன் அப்போது அர்த்தநாரீசுவரராகக் காட்சி தந்தார்.
அர்த்தநாரீசுவரர் தலமே திருச்செங்கோடு அன்று அன்னை சக்தி கேதாரநாத்தில் தவம் இருந்தாள். அதனையொட்டியே, இன்றும் பெண்கள் தங்கள் கணவன்மாரைப் பிரியாதிருக்க வேண்டி கேதார கவுரி விரதம் இருந்து வருவதுண்டு.
இவ்வாறு அன்னை சக்தியை முனிவர் அவமதித்ததன் காரணமாக, சக்தியிழந்து மெலிந்த மேனியோடு நடராசர் திருச்சந்நிதியில் விளங்குகின்றார். எனவே, அன்னை சக்தியாகிய காளிகாம்பாளை அவமதிப்போருக்கு, அவள் அருள் கிட்டாதது மட்டுமின்றி, அல்லல்களும் தீராது என்பது உண்மை.