மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, சொக்கநாதப்பெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் இன்று (ஆக.,26) மதியம் 3.22 மணிக்கு புட்டுத்தோப்பில் நடக்கிறது. ”வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் வர வேண்டும்,” என மன்னர் குலசேகரபாண்டியன் உத்தரவிட்டார். சிவபக்தையான வந்தியம்மை மூதாட்டி பிட்டு விற்று வந்தார். உதவ யாருமில்லை. அவருக்கு மோட்சம் அளிக்கும் விதமாக சிவபெருமான் கூலியாளாக வடிவெடுத்தார். வந்தியம்மையிடம் பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்றார். ஒப்புக்கொண்ட வந்தியம்மை, சிவபெருமானுக்கு பிட்டளித்தார். உண்ட மயக்கத்தில் சிவபெருமாள் துாங்கினார். வைகை பணியை பார்வையிட வந்த மன்னன், வேலை செய்யாமல் துாங்கி கொண்டிருந்த சிவபெருமானின் முதுகில் அடிக்க… அனைத்து உலக உயிர்கள் முதுகிலும், அவ்வடிபட்டது.
மன்னர் உண்மை உணர்ந்தார். சிவபெருமான்… அசரீரியாக மாணிக்கவாசகர் பெருமையையும், வந்தியம்மைக்கு சிவலோக பதவி தருவதற்காகவும், தாம் இவ்வாறு செய்ததாக மன்னருக்கு உரைத்தார். புராண காலம் முதல் பிட்டுக்கு மண் சுமந்த விழா கடைப்பிடித்து வரப்படுகிறது. பிட்டு உற்சவ வகையறா கட்டளை சார்பில், பிட்டு சொக்கநாதர் கோயில் மைதானத்தில் இன்று மதியம் 3.22 முதல் 3.46 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட உற்சவமும், மண் சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தக்கார் கருமுத்து கண்ணன், அறநிலையத்துறை இணை கமிஷனர்கள் பச்சையப்பன், நடராஜன் கலந்து கொள்கின்றனர்.