தேடப்படும் குற்றவாளிக்கு உதவினாரா சுஷ்மா ஸ்வராஜ்? பெரும் பரபரப்பு
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தியதில் சுமார் ரூ.425 கோடிக்கு முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லலித் மோடி, இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென இங்கிலாந்துக்கு தப்பி சென்றுவிட்டார். இங்கிலாந்தில் இருந்து இந்தியா வர மறுக்கும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லலிதமோடியின் மனைவியின் சிகிச்சைக்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
லலித் மோடியின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் போர்த்துகீசிய நாட்டில் சிகிச்சை செய்வதற்காக அவருக்கு போர்த்துகீசிய டூரிஸ்ட் விசா வழங்க சுஷ்மா ஸ்வராஜ், இங்கிலாந்து அரசுக்கு பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.
தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உதவி செய்த சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தன்மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள சுஷ்மா ஸ்வராஜ், “மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவி செய்தேன். இங்கிலாந்து சட்டப்படி லலித் மோடி விண்ணப்பத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை செய்யுங்கள்.
ஒரு அவசர உதவிக்காக, வெளிநாட்டில் உள்ள இந்தியருக்கு முறைப்படி உதவுவதில் தவறேதும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயல்வதாகவும், லலித் மோடியின் விசாவுக்காக தாம் எவ்வித அழுத்தத்தையும் தரவில்லை என்றும் சுஷ்மா கூறியுள்ளார்.