234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயார். தமிழிசை செளந்திரராஜன்
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதிலும் மோடி அலை வீசிய போதிலும், தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதிலும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் பலத்தை தமிழகத்தில் நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அந்த கட்சி உள்ளது.
இதனால் இம்முறையும் வலுவான கூட்டணி அமைக்க பாஜக இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தது. இதுவரை எந்த முக்கிய கட்சியும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை.
தேமுதிக தன்னுடைய கூட்டணியில் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த பாஜக டெல்லியில் இருந்து அமைச்சர் ஜவடேகர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் விஜயகாந்த் அசைந்து கொடுப்பதாக இல்லை. இதனால் விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்ட பாஜக தமிழக தலைமை தனித்து நிற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “‘தேர்தல் மேலிட பார்வையாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே எங்கள் கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் பேசி வருகிறார். இந்த தேர்தலில் கூட்டணி சிறப்பாக அமையாவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பா.ஜ.க. வலுவான நிலையில் தயாராக உள்ளது’ என்று கூறியுள்ளார்.
அனைத்து கட்சிகளும் பாஜகவை தவிர்த்துவிட்டதால் வேறு வழியின்றி தனித்து போட்டி என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.