பாபர் மசூதியை இடித்ததை போல உலக அதிசயங்களுள் ஒன்றாக திகழும் தாஜ்மஹாலையும் இடிக்க பா.ஜ.க அரசு சதி செய்திருப்பதாக உத்தர பிரதேச அமைச்சர் அசாம் கான் திடீரென ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று உ.பியில் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் அசாம் கான் ”பாபர் மசூதியை இடித்ததை போலவே தாஜ்மஹாலையும் இடிக்க பா.ஜ.க. சதி வேலையில் ஈடுபட்டு உள்ளது. அவர்கள் ஆபத்தான விளையாட்டை விளையாட தொடங்கிவிட்டனர். அவர்கள் நாட்டில் எந்தவொரு வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளாமல் மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தவே முயற்சித்து வருகின்றனர்.
மக்களை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்கு முன்னர் பல ஆண்டுகள் ஆட்சி செய்த முகலாயர்களும், பிரிட்டிஷாரும் கூட மக்களை மதமாற்றம் செய்ய முடியாமல் தோல்வியையே அடைந்திருந்த நிலையில் பாஜகவினர்களால் இந்த விஷயத்தில் வெற்றி பெற முடியாது.
அஸ்ஸாமில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானில் பள்ளி குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு கூட பிரதமர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். ஆனால், அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி ஆதிவாசிகளுக்கு மோடி இரங்கல் தெரிவிக்கவில்லை. தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கிறார்” என்றார்.