காங்கிரஸ் – ஆம் ஆத்மி ரகசிய கூட்டணி – பா.ஜ.க குற்றச்சாட்டு

டெல்லி சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்தது. ஆனால் ஆதரவை ஏற்பதற்கு, காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு 18 நிபந்தனைகள் விதித்த அரவிந்த் கெஜ்ரிவால், பொதுமக்களின் கருத்துகளை கேட்டு ஆட்சியமைப்பதாக தற்போது அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், காங்கிரசும், ஆம் ஆத்மியும் தேர்தலுக்கு முன்னே ரகசிய உடன்பாடு வைத்திருந்ததாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பா.ஜனதா சட்டமன்ற கட்சித்தலைவர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “கடுமையான விலைவாசி மற்றும் ஊழல்களால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்று அந்த கட்சிக்கு தேர்தலுக்கு முன்னே தெரியும். எனவே, சட்டமன்ற தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் ரகசிய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டன” என்று கூறினார்.

மேலும், ஆட்சியமைக்க 18 நிபந்தனைகளை விதித்த ஆம் ஆத்மி கட்சியினர், எங்களின் 14 கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கேள்வி எழுப்பினார். அவை:

  • மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் உங்களால் ஆட்சியை அமைக்க முடியுமா? முடியாதா?
  • காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியால் ஆட்சியமைக்க முடியாதென்றால், இன்னும் எத்தனை நாட்கள் தேவை என்று துணை நிலை ஆளுநரிடம் தெளிவாக கூற முடியுமா?
  • முறையான அரசு அமையாததால் டெல்லி அரசு இயந்திரம் முற்றாக செயலிழந்து விட்டது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்குமா?
  •  ஆம் ஆத்மிக்கான ஆதரவின் பின்னணியில் உள்ள ரகசிய பேரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் மக்களிடம் வெளிப்படையாகக் கூற முடியுமா?
  • காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தங்களுக்கு இடையிலான இந்த விளையாட்டை எப்போது முடித்துக் கொள்வார்கள்?
  • ஆம் ஆத்மி கட்சி தலைவரும், ஆலோசகருமான பிரசாந்த் பூஷன் தீவிரவாதிகள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இந்த நாடும், டெல்லி மக்களும் இதுபோன்ற தேசவிரோத சக்திகளை ஏற்றுக் கொள்வார்களா?
  • தற்போது நிறைவேற்றப்பட்ட லோக்பால் மீது ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சேபனை இருந்தால், நீங்கள் விரும்பும் வகையிலான லோக்பால் சட்டத்துக்காக ஏன் போராட்டத்தை தொடங்கவில்லை?

என்பது உள்பட 14 கேள்விகளை அப்போது அவர் எழுப்பினார்.

Leave a Reply