பாமகவைவிட பாஜக சிறிய கட்சி. அன்புமணி ராமதாஸ்
தமிழக தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் நிலை உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் பாஜக மட்டும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி அப்படியே இருப்பதாக சமாளித்து வருகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, மற்றும் மதிமுக இருந்தது. தேர்தல் முடிந்தவுடனே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மதிமுக பிரிந்துவிட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து நிற்கவுள்ளதாக அறிவித்துள்ள பாமக, முதல்வர் வேட்பாளரையும் அறிவித்துவிட்டது. தேமுதிக தலைவர் தற்போது எந்த கூட்டணியில் உள்ளார், இனிமேல் எந்த கூட்டணிக்கு போவார் என்று அவருக்கே தெரியாது. இந்நிலையில் பாஜக, தங்கள் கூட்டணி உடையாமல் அப்படியே இருப்பதாக கூறிவருகிறது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்., நேற்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி கூறியதாவது:
தமிழகத்தில் மது விலக்கு வேண்டும் என ராஜாஜி, பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோர் கோரியதை நிராகரித்து, திமுக தலைவர் கருணாநிதி மதுக் கடைகளைத் திறந்துவைத்தார். இப்போது, அதிமுக அரசும் மதுக் கடைகளை மூட மறுக்கிறது. மது விலக்கை வலியுறுத்தி, கடந்த 26 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது.
திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூடாமல், மது விலக்கு குறித்து மக்களை ஏமாற்றும் வகையில் கருணாநிதி பேசி வருகிறார். மது விற்பனையால் வரும் வருவாயைக் கைவிட்டு, தாதுமணல், கிரானைட் மூலம் மாநில அரசு வருவாய் ஈட்டலாம். பாமக ஆட்சிக்கு வந்தால் மது விலக்குடன், தாலுகா அளவில் மது அருந்துவோர் மீட்பு சிகிச்சை மையத்தைச் செயல்படுத்தும்.
பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஆவதற்கு பாமக ஆதரவளித்துக் கடிதம் கொடுத்தது. ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி இருக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை பாமகவைவிட பாஜக சிறிய கட்சி என்பதை அந்தக் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். திமுக, அதிமுக அல்லாத நிலையில், பாமக தலைமையை ஏற்கும் கட்சிகளை மட்டுமே கூட்டணியில் சேர்ப்போம். எங்கள் தலைமையை ஏற்று யாரும் வராவிட்டால், இளைஞர்களை நம்பி தனித்துப் போட்டியிடுவோம். கூட்டணி பேரத்தில் பாமகவுக்கு உடன்பாடில்லை’ என்று கூறியுள்ளார்.