கருணாநிதியின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஆதரவு

கருணாநிதியின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஆதரவு
ela.ganesan
இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு பகிரங்கமாகவே கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் திமுகவுடன் கூட்டணி சேர கிட்டத்தட்ட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கருணாநிதி தெரிவித்த கருத்து ஒன்றுக்கு காங்கிரஸ் கட்சியின் எதிரிக்கட்சியான பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழகத்தில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக  குற்றஞ்சாட்டினார். திமுக தலைவர் கருணாநிதி கூறிய குற்றச் சாட்டை தேர்தல் ஆணையம் அலட்சியப்படுத்தக் கூடாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழக வாக்காளர் பட்டியலில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். பல தேர்தல் களம் கண்ட மூத்த தலைவரான அவருக்கு தேர்தலில் எப்படியெல்லாம் தவறுகள் நடக்கும் என்பது நன்றாகவே தெரியும். எனவே, அவரது குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளின் வழக்கமான குற்றச்சாட்டாகக் கருதி அலட்சியப்படுத்தாமல் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பொதுவாக மக்களவைத் தேர்தல் என்றால் தேசியக் கட்சிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் என்றால் மாநிலக் கட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இந்த நிலையை மாற்றி தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் என்பதை நிரூபிக்க பாஜக முயற்சித்து வருகிறது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வலுவான 3-வது அணி அமைத்தோம். அதே நிலைப்பாட்டில்தான் இப்போதும் பாஜக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் வரும் பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் இணைந்து போட்டி யிடுவார்கள் என நம்புகிறோம். பிரத மர் மோடியின் கோவை வருகை தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதர வான மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply