நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு போட்டியாக மனுதாக்கல் செய்து பின்னர் திடீரென வாபஸ் பெற்ற பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் நேற்று தலைமை செயலகத்தில் தனது கணவருடன் நேரில் வந்து ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் அதிமுக உறுப்பினர் அட்டையை கொடுத்தார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளையம்மாள் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அவரும், அவருடைய கணவரும், பா.ஜ.க. வர்த்தக பிரிவு மாநிலச் செயலாளருமான கணேச பெருமாள்ராஜா ஆகியோர் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுபபினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முத்துக்கருப்பன், எம்.பி., ஆகியோரும் உடன் இருந்தனர்.
பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் மட்டுமின்றி நேற்று ஏராளமான திமுக, பாமக, தேமுதிக கட்சியை சேர்ந்தவர்களும் அதிமுகவில் இணைந்து முதல்வரிடம் இருந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டனர்.