கோவையில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்டமான மாநாட்டில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, தேர்தல் ஊழல்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறினார்.
கோவையில் நடைபெற்ற பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா, “தமிழகத்தில் தேர்தல் முறைகேடுகளை, ஊழல்களைத் தடுக்க பாஜக-வை வலுவாக்குவது அவசியம். இதனால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும்.
தேர்தல் சமயங்களில் பணம் ஒரு பெரிய பங்காற்றுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதனைத் தடுக்க பாஜக-வை வலுப்பெறச் செய்ய வேண்டும். அதாவது வாக்குச்சாவடிகளில் பாஜக-வை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் அளிப்பதைத் தடுக்க முடியும். ” என்று கூறியுள்ளார்.
தேசிய உறுப்பினர் சேர்க்கையில் பாஜக இதுவரை 6.2 கோடி பேரை சேர்த்துள்ளது என்றும் மார்ச் 31ஆம் தேதிக்குள் 10 கோடி பேரை தேசிய அளவில் உறுப்பினர்களாக சேர்க்கும் இலக்கு நிறைவேறும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை 60 லட்சம் பாஜக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு வைத்துள்ளதாகவும், இதுவரை 22 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும் மிக விரைவில் இலக்கை அடைவோம் என்றும் அவர் பேசியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்திந்திய பாஜக செயலர் முரளிதர் ராவ், தேசியச் செயலர் எச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.